Published : 27 Oct 2021 03:10 AM
Last Updated : 27 Oct 2021 03:10 AM
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூரைச் சேர்ந்த சுபா என்பவர் நேற்று மனு அளித்தார். அதில், ‘கங்கைகொண்டான் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு என்னையும் சேர்த்து 13 பேர் போட்டியிட்டோம். ஆட்டோ சின்னத்தில் நான் போட்டியிட்டேன். திமுக ஒன்றியச் செயலாளர் அருள்மணியின் மருமகள் பல்பு சின்னத்தில் போட்டியிட்டார்.
மொத்தம் 6,599 வாக்குகள் பதிவாகி இருந்தது.
கங்கை கொண்டான் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது வார்டு முதல் 10-வது வார்டுகள் வரை வாக்கு எண்ணிக்கையின்போது நான் முன்னிலையில் இருந்தேன். வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு காரணங்களால் 150 வாக்குகளுக்கு மேல் நிராகரிக்கப்பட்டன. அதில் 125 வாக்கு சீட்டுகளில் ஆட்டோ சின்னத்துக்கு பதிவாகியிருந்தது. எனது முகவர்களால் உரிய ஆட்சேபனை செய்தும் அதை வாக்கு எண்ணும் அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை.
வேட்பாளர் கவிதாவின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். எனது முகவர்களை மிரட்டி வெளியே அனுப்பியதோடு அங்கிருந்த பலரையும் தாக்கினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் குழப்பமும், பீதியும் ஏற்பட்டது. இது சம்பந்தமாக வீடியோ ஆதாரம் உள்ளது. அதிகாலையில் கவிதா 1,759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 1,609 வாக்குகள் பெற்று நான் 2-வது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஊராட்சி மன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை பயன்படுத்தி திமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அது சட்டத்துக்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் மாறானது. வேண்டுமென்றே தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அருள்மணிக்கு பயந்து அவருக்கு சாதகமாக செயல்பட்டு உள்ளனர்.
உண்மையிலேயே தேர்தலில் 38 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நான் தான். எனவே, கவிதா வெற்றி பெற்றதாக அறிவித்ததை ரத்து செய்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT