Published : 26 Oct 2021 03:07 AM
Last Updated : 26 Oct 2021 03:07 AM
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கரூரில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும், நிராதரவாக கைவிடப்படும் பெண்கள், குழந்தை திருமணங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தற்காலிக தங்கும் வசதி, மருத்துவ உதவி, சட்ட உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகளை ஓரிடத்தில் வழங்கும் வகையில் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், அரவக்குறிச்சி எம்எல்ஏ ஆர்.இளங்கோ ஆகியோர் கரூரில் உள்ள மையத்தில் குத்துவிளக்கேற்றி சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர்.
இந்த நிகழ்வில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குநர் சந்தோஷ்குமார், கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் அருண் தம்புராஜ் குத்து விளக்கேற்றினார்.
அப்போது, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை நேரடியாகவோ அல்லது 04365 247353, 9578573747, 9150057442, 9150057443 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில், எஸ்.பி கு.ஜவஹர், எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸ், மாநில சிறுபான்மை நலக் குழு உறுப்பினர் தமிம் அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT