Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM
திருவண்ணாமலை அருகே ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளி யேறி நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதற்கு, நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதுதான் காரணம் என பாதிக் கப்பட்டுள்ள மக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வேங்கிக்கால் ஏரி நிரம்பி உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால், வேங்கிக்கால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனால், திருவண்ணாமலை – வேலூர் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலையில் ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் வழிந்து ஓடியது. வேலூர் சாலையை கடந்த வெள்ளப்பெருக்கு, ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள குறிஞ்சி நகர், பொன்னுசாமி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது.
வேங்கிக்கால் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், பல்வேறு தடைகளை கடந்து சேரியந்தல் ஏரியை சென்றடைந்தது. இந்த ஏரியும் ஏற்கெனவே நிரம்பி இருந்ததால், கனமழை மற்றும் வேங்கிக்கால் ஏரியில் இருந்து வந்த கூடுதல் தண்ணீரானது திருவண்ணாமலை – அவலூர் பேட்டை சாலையை ஆக்கிரமித்து கொண்டது. அங்கேயும் சுமார் ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. மேலும், அவலூர்பேட்டை சாலையை கடந்த வெள்ளநீர், சேரியந்தல், கிருஷ்ணா நகர் மற்றும் ஐயப்பன் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியி ருப்புகளை சூழ்ந்து கொண்டது.
வேலூர் சாலை மற்றும் அவலூர் பேட்டை சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கார், லாரி மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
மேலும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளநீரானது, தாழ்வானப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. இதனால், கீழே இருந்த பொருட்களை, உயரமான இடத்தில் வைத்துவிட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு பலர் வெளியேறி உள்ளனர். சேரியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இதேபோல், நொச்சிமலை ஏரியில் இருந்தும் தண்ணீர் வெளியேறியதால், திண்டிவனம் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளும் வெள்ள நீரில் மூழ்கியது. ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறிய காரணத் தால், திருவண்ணாமலை புறநகர் பகுதிகள் முழவதும் வெள்ளக் காடாக உள்ளது.
கண்துடைப்புக்காக பணிகள்...
இது குறித்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கூறும்போது, “சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருந்த நீர் வழி பாதைகளை சரி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தி.மலை நகரம் மற்றும் அருகே உள்ள ஊராட்சி பகுதிகளில் நீர்வழி பாதைகள் தூர்வாரப்பட்டது. மேலும், நீர்வரத்துக் கால்வாய் களும் தூர்வாரியதாக கூறப் படுகிறது.ஆனால், அப்பணிகள் முழுமை பெறாமல் கண் துடைப்புக்காக நடைபெற்றுள்ளது. நீர்வழி பாதை மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லை. செடி, கொடிகளை மட்டும் அகற்றிவிட்டு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்ததால், பால் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க சிரமப் படுகிறோம். பல இடங்களில் வெள்ளநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எந்தவித சமரசமின்றி நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே, இதற்கு தீர்வு காண முடியும். இல்லையென்றால், ஒவ் வொரு ஆண்டும் மழைக் காலத்தில், இதுபோன்ற பாதிப்புகளை அப்பாவி மக்களாகிய நாங்கள் எதிர்கொண்டு அவதிப்படும் நிலை என்பது தொடரும்” என வேதனை யுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில், வேலூர் சாலையில் ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்களது உத்தரவின் பேரில், சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி யில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT