Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM
குவாரிகள் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள கல் தட்டுப்பாட்டால் புவிசார் குறியீடு பெற்ற கோவை வெட்கிரைண்டர் தொழில் முடங்கியுள்ளது. தீபாவளி ஆர்டர்களும் சரிவைக் கண்டுள்ளன.
கோவைக்கு பெருமை சேர்க்கும் பல்வேறு தொழில்களில் முக்கியானது வெட்கிரைண்டர் உற்பத்தி. கடந்த 1950-ம் ஆண்டுகளில் மிக எளிமையாக தொடங்கப்பட்ட வெட்கிரைண்டர் உற்பத்தி, கடந்த 70 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. கோவையின் அடையாளமாகத் திகழும் வெட்கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்று வழங்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய தரம் வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கோவையில் இத்தொழில் சார்ந்து உள்ளன.
தொடக்க காலத்தில் உணவகங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த வெட்கிரைண்டர்கள் மெல்ல மெல்ல வீட்டு சமையலறைகளில் இடம் பிடிக்க ஆரம்பித்தவுடன், மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படும் கிரைண்டர்களின் வடிவமும் மாறியது. கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியைப் பொறுத்தவரை தற்போது கன்வென்ஷனல் எனப்படும் வழக்கமான பெரிய சைஸ் ரகம் (ஒரு லிட்டர் முதல் 40 லிட்டர் வரை), டில்டிங் எனப்படும் சாய்க்கக் கூடிய ரகம் (2 லிட்டர் முதல் 40 லிட்டர் வரை) மற்றும் டேபிள் டாப் கிரைண்டர்கள் (2 மற்றும் 3 லிட்டர்) உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகம் மட்டுமில்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் கோவையிலிருந்து வெட் கிரைண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஊத்துக்குளியில் செயல்பட்டு வந்த 64 குவாரிகளை மூட சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கிரைண்டர் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான தரமான கற்கள் கிடைக்காமல், கோவையில் வெட்கிரைண்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் கிரைண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால், தீபாவளி ஆர்டகள் இயல்பாக இல்லை என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
இதுகுறித்து கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரி பாகம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சவுந்திரகுமார் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வெட்கிரைண்டர் உற்பத்தியில் பிரதான மையமாக கோவை உள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து தான் தரமான கற்கள் வெட்கிரைண்டர் உற்பத்திக்கு கிடைத்து வந்தன. தற்போது குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் கடந்த இரு மாதங்களாக கோவையில் வெட்கிரைண்டர் உற்பத்தி தடைபட்டுள்ளது. டேபிள் டாப் மற்றும் டில்டிங் ரகங்களுக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து கற்கள் கிடைக்கின்றன. அந்த கற்களைக் கொண்டு வழக்கமான பெரிய சைஸ் ரக வெட்கிரைண்டர் தயாரிக்க முடியாது. இதுவும் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும் என்பது தெரியாது. இதுவும் நின்று விட்டால் அவ்வளவு தான்.
மேலும் கட்டுமானங்களுக்கு தற்போது கற்களால் உருவாக்கப்படும் எம்-சாண்ட், பி-சாண்ட் தேவைகளால, ஒரு சில இடங்களில் வெட்டி எடுக்கப்படும் கற்கள் அவற்றுக்கு சென்று விடுவதால், எங்களுக்கு கிடைப்பதில்லை.
இவை ஒருபுறமிருக்க, மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. உதாரணமாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் கிலோ ரூ.138-க்கு விற்கப்பட்ட இரும்பு தற்போது ரூ.200-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் வெட்கிரைண்டர்களின் விலையையும் நாங்கள் கடந்த 3 மாதங்களில் படிப்படியாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குறிப்பாக ரூ.3500-க்கு விற்கப்பட்ட வெட்கிரைண்டரை தற்போது ரூ.4500-க்கு விற்க வேண்டியுள்ளது. அனைத்து ரகங்களின் விலையும் உயர்ந்துள்ளது. விலை உயர்வால் பொதுமக்களிடம் வாங்கும் திறன் குறையும் என்பதைக் கருத்தில் கொண்டு, வர்த்தகர்களும் எங்களுக்கான ஆர்டர்களைக் குறைத்துள்ளனர். தீபாவளி ஆர்டர் வழக்கமாக இருப்பது போல இந்த ஆண்டு வரவில்லை.
தமிழகம் தவிர, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார், மேற்குவங்கம், டெல்லி என பல மாநிலங்களுக்கு கோவையிலிருந்து வெட்கிரைண்டர்கள் செல்கின்றன. கடந்தாண்டுக்கு முன்பு வரை மாதந்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேல் சென்ற வெட்கிரைண்டர்கள் எண்ணிக்கை தற்போது 30 ஆயிரமாக குறைந்துள்ளது. கன்வென்ஷனல் ரக வெட்கிரைண்டர் தயாரிப்பு முற்றிலுமாக இல்லை என்ற நிலையில், டேபிள் டாப், டில்டிங் மற்றும் குறைந்தளவில் உற்பத்தியாகிறது. இதோடு, அம்மிக்கல், இடி கல் உள்ளிட்டவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன
கோவையில் மட்டும் வெட்கிரைண்டர் உற்பத்தி சார்ந்து நேரடியாகவும், மறைமுகவாவும் ஒரு லட்சம் குடும்பங்கள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் இத்தொழிலில், தற்போது உற்பத்தியாளர்களுக்கான இழப்பு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு சிறுகனிம சலுகை விதிகளில் உரிய திருத்தம் செய்து, கல் குவாரி விவகாரத்தில் உரிய தீர்வு காண வேண்டும். மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT