Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM
தொலைந்துபோன ஏடிஎம் கார்டின் செயல்பாட்டை முடக்க, மதுரை தனியார் நிறுவன ஊழியரை ‘ கூகுள் பே’ மூலம் ரூ.1 லட்சம் அனுப்ப வைத்து முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம், எம்.குன்னத் தூரைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா (32). தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். இவரது வங்கி ஏடிஎம் கார்டு சில நாட்களுக்கு முன்பு தொலைந்துபோனது. உடனே சம்பந்தப்பட்ட வங்கியின் இலவச மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால், அழைப்பை எடுக்கவில்லை. சிறிது நேரத்தில் அவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தொலைந்துபோன ஏடிஎம் கார்டின் செயல்பாட்டை ஆன்லைன் மூலம் முடக்கி, புதுப்பிப்பதாகத் தெரிவித்தார்.
இதற்காக ‘எனி டெஸ்க்’ என்ற அப்ளிகேஷனை மொபைலில் பதிவிறக்க அவர் அறிவுறுத்தினார். பின்னர், தொலைந்துபோன கார்டின் செயல்பாட்டை முடக்கி, புதிய கார்டை பெற கூகுள்பே மூலம் ரூ.1 லட்சம் அனுப்புமாறும், பிறகு அந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார். இதை நம்பிய செந்தில்ராஜா அந்த நபருக்கு கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பினார்.
இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் ஜார்மிங் விஸ்லின் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கூகுள்பே மூலம் பணம் அனுப்பச் சொல்லி முறைகேடு செய்திருப்பது புதுவிதமாக இருக்கிறது. வடமாநில இளைஞர்கள் இதுபோன்ற முறைகேட்டில் அதிகம் ஈடுபடுகின்றனர். வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT