Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM
அரவக்குறிச்சி அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளர், பொக்லைன் ஆபரேட்டர் ஆகியோர் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள செல்லிவலசுவைச் சேர்ந்தவர் வீரக்குமார்(32). குடிநீர் குழாய் பதிக்கும் ஒப்பந்தப் பணியாளர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி அச்சனம்பட்டியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25). பொக்லைன் ஆபரேட்டர்.
இவர்கள் இருவரும் கரூர் மாவட்டம் பள்ளபட்டி பேரூராட்சி தெற்குமந்தை தெருவில் நேற்று முன்தினம் இரவு குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுத்து, அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கை இடம் மாற்றி வைத்தபோது, மின்கசிவு காரணமாக அஜித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தடுமாறிய அஜித்குமார், அருகில் வேலை செய்த வீரக்குமார் மீது விழுந்தார். இதில், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் இருவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பள்ளபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரின் மரணத்துக்கும் இழப்பீடு வழங்கக் கோரி, உடல்களை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியர் பன்னீர்செல்வம், டிஎஸ்பி முத்துச்செல்வன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT