Published : 20 Oct 2021 03:09 AM
Last Updated : 20 Oct 2021 03:09 AM
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே பயணிகள் சங்கப் பொதுச்செயலாளர் கே.பத்மநாதன் வலியுறுத்தி உள்ளார்.
ரயில்வே அமைச்சகம், தென்னக ரயில்வே நிர்வாகம் ஆகியவற்றுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
ரயிலில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. 60 வயது ஆண்களுக்கு 40 சதவீதம், 50 வயது பெண்களுக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகை கடந்த 20 ஆண்டுகளாக வழங்கியது.
தற்போது மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்குவதால் ரூ.1,100 கோடி நிதி நெருக்கடி ஏற்படுகிறது. ஒரு பயணியால் 57 சதவீதம் மட்டுமே ரயில்வேக்கு வருவாய் கிடைப்பதால் மூத்த குடிமக்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்க நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதிக்குப் பிறகு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து மூத்த குடிமக்களுக்கு வழங்கிய சலுகைகள் நிறுத்தப்பட்டன. தற்போது அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், சிறப்பு ரயில்களும் மக்களின் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது.
கரோனா பரவலை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், சிறப்பு ரயில்களும் கூடுதல் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. ரயில்வேக்கு சரக்கு, பயணிகள் ரயில்கள் மூலம் வருமானம் அதிகரித்து வருகிறது.
எனவே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கிய சலுகைகள் மீண்டும் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT