Published : 19 Oct 2021 03:09 AM
Last Updated : 19 Oct 2021 03:09 AM
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மாதம்பாளையம் கிராம விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த மனு விவரம்:
மாதம்பாளையத்தில் உள்ள குட்டையில் தேங்கும் நீர் ஆதாரத்தைக் கொண்டே இப்பகுதியில் விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குட்டைக்கான நீர்வழிப்பாதையை சிலர் ஆக்கிரமித்ததால், நீர் வருவது தடைபட்டது.
இந்த ஆக்கிரமிப்பு காரணமாக, அத்திக்கடவு அவிநாசி திட்டம் மூலம் வரவேண்டிய தண்ணீரும் கிடைக்காமல் தடைபட்டுள்ளது.
இந்த குட்டையின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, குடிமராமத்து பணிகள் மேற்கொண்டு, அத்திக்கடவு அவிநாசி திட்டம் மூலம் குட்டையில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.
176 மனுக்கள்
இதேபோல், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோயில் திருவிழா, திருமணம் மற்றும் அனைத்து வகையான விசேஷங்களும் தடைப்பட்டதால், எங்களது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.எனவே, அனைத்து கலைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைப்போல் கலைஞர்களுக்கு இசைக்கருவி, மூத்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம், இலவச பஸ் பாஸ், இலவச வீடு, வீடு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 176 மனுக்கள் நேற்று அளிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT