Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM
அடிப்படை வசதிகளைப் பெறவும் சட்ட உதவி மையத்தின் ஆலோசனையைப் பெறலாம் என்று சார்பு நீதிபதி வி.தீபா பேசினார்.
மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் குலமங்கலத்தில் நடந்தது. வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் வரவேற்றார்.
சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா தலைமை வகித்துப் பேசியதாவது:
மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் ஏழைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் சார்பில் கட்டணம் இல்லாமல் வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டோர் சார்பில் புதிய வழக்குகளைத் தாக்கல் செய்யவும், ஏற்கெனவே நடந்து வரும் வழக்குகளில் ஆஜராகியும் உரிய நீதியைப் பெற்றுத் தருவர்.
சட்டம் சார்ந்த குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் தவிர சட்டம் சாராத சாலை வசதி, தண்ணீர் வசதி, சுகாதாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகளைப் பெறவும் சட்ட உதவி மையத்தின் ஆலோசனையைப் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வழக்கறிஞர்கள் கண்ணன், உமாசங்கர், கர்ணன், குலமங்கலம் ஊராட்சித் தலைவர் ராணிராஜா உள்ளிட்டோர் பேசினர். சட்ட ஆர்வலர்கள் ராஜு, நித்யஜோதி, காயத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT