Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM
போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மதுரை மார்க்சிஸ்ட் மாநகர் போக்குவரத்து இடைக்கமிட்டி 9-வது மாநாடு வில்லாபுரத்தில் நடந்தது. தலைமைக்குழு உறுப்பினர்கள் கனகசுந்தர், திலீப், லெனின் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சு.வெங்கடேசன் எம்.பி. மாநாட்டை தொடங்கிவைத்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரா.லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில், மதுரை அரசு போக்குவரத்துக்கழக மண்டலத்துக்கு உட்பட்ட பொன்மேனி, சிப்காட், புதுக்குளம், திருப்புவனம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், செக்கானூரணி, டி.கல்லுப்பட்டி கிளை அரசு போக்குவரத்து பணிமனைகள் மண் தரையாக இருப்பதால் மழையின்போது சேறும் சகதியுமாக மாறி பேருந்துகளை இயக்குவது சிரமமாக உள்ளது. எனவே, கான்கிரீட் தளம் அமைத்து பணிமனைகளை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். தீபாவளி பண்டிகையின்போது மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT