Published : 09 Oct 2021 03:11 AM
Last Updated : 09 Oct 2021 03:11 AM
கோட்டக்குப்பம் அருகே உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. மீன்பிடித் தொழிலை நம்பி இந்த கிராம மக்கள் உள்ளனர். தமிழக அரசு அண்மையில், ஆரோவில் பீச், பொம்மையார்பாளையம் வரை கடல் அரிப்பை தடுப்பதற்கு கற்களை கொட்டியது.
ஆனால் பக்கத்து கிராமமான பிள்ளைச்சாவடி கடற்கரையில் கற்களை கொட்டவில்லை. தற்போது பெய்து வரும் மழைக்கு நடுவே, ஏற்பட்டு வரும் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது.
தொடரும் கடல் அரிப்பால் 10 மீட்டர் அளவிற்கு கடற்கரை பகுதியை இக்கிராம மீனவர்கள் இழந்துள்ளனர். படகு நிறுத்துவதற்கு உரிய இடம் இல்லாமல்பக்கத்து மீனவ கிராமத்தை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் படகுகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது.
கோட்டக்குப்பத்தில் இருந்து பொம்மையார்பாளையம் வரையில் கற்களை கொட்டிய அரசு, புதுவை எல்லையோரம் உள்ள பிள்ளைச்சாவடி கடல் பகுதியிலும் கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என விழுப்புரம் ஆட்சியர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் இக்கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பிள்ளைச்சாவடி மீனவ குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்ததால் 2 விசை படகு மற்றும் 4 வீடுகள் சேதமடைந்தன. இதனால்அச்சமடைந்த 200-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் நேற்று அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸார் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களின் ஆதங்கத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு எடுத்துச் சொல்வதாக கூறவே, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT