Published : 08 Oct 2021 03:13 AM
Last Updated : 08 Oct 2021 03:13 AM

மீனாட்சியம்மன் கோயில் கடைகளை அகற்ற தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கடைக்காரர்கள் சங்க தலைவர் ராஜூநாகுலு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 115 கடைகள் இருந்தன. இதில் 22 கடைகளில் பூ வியாபாரம் செய்யப்பட்டன. மற்ற கடைகளில் மஞ்சள், குங்குமம், பூஜை பொருட்கள், கலை நயமிக்க நகைகள், மதப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில் 2.2.2018-ல் வீரவசந்தராயர் மண்டபம் பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் 40 கடைகள் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தை அடுத்து மீனாட்சியம்மன் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. 8 மாதங்களுக்கு பிறகு கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கிடையே மீனாட்சியம்மன் கோயில் கடைகளை காலி செய்ய கோயில் நிர்வாகம் 24.9.2021-ல் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் அக். 5-ல்தான் அளிக்கப்பட்டது. கடைகளை காலி செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறையிடம் மேல் முறையீடு செய்துள்ளோம்.

அந்த மேல்முறையீட்டில் முடிவு ஏற்படும் வரை கடைகளை காலி செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் மீனாட்சியம்மன் கோயிலில் கடை நடத்தி வரும் ராம்தாஸ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

பின்னர் வியாபாரிகளின் மேல்முறையீடு மனு மீது அறநிலையத்துறை 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும். கடைகளை காலி செய்யும் உத்தரவுக்கு 15 நாட்கள் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x