Published : 08 Oct 2021 03:13 AM
Last Updated : 08 Oct 2021 03:13 AM
வாரம் முழுவதும் கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கக் கோரி ரங்கத்தில் நேற்று 3 மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, தஞ்சாவூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 4 மாவட்ட பாஜகவினர் 450 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட வாரம் முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க வலியுறுத்தி பாஜகவின் திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் சார்பில், திருச்சி ரங்கம் ராஜகோபுரம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஏ.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் பேசியது:
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில் வார இறுதி நாட்களிலும் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அடுத்த வாரத்துக்குள் தமிழக அரசு அனுமதி அளிக்காவிட்டால், அத்துமீறி நுழைவோம் என்றார்.
தஞ்சாவூரில்...
ஆர்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ தலைமை வகித்தார். தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் கருப்பு எம்.முருகானந்தம் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்து கோயில்களின் சொத்துகளில் இந்துக்களுக்கு மட்டுமே பட்டா வழங்க வேண்டும். கோயிலில் காணிக்கையாக பெறும் தங்க நகைகளை உருக்கக் கூடாது.
கோயில் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்யும் அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்திருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், பாஜகவினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், 50 பெண்கள் உட்பட 450 பேரை போலீஸார் கைது செய்து, பிற்பகலில் விடுவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT