Published : 07 Oct 2021 03:14 AM
Last Updated : 07 Oct 2021 03:14 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில், மாவிவசாயிகளுக்கு நிவாரணம் கோரும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னோடி விவசாயி வரதராஜூலு தலைமை வகித்தார். அனைத்து மாவிவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சவுந்தர ராஜன் வரவேற்றார். நிர்வாகிகள் பெரியசாமி, கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் தவமணி, சிவகுரு, சாந்தசீலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவிவசா யிகள் பேசியதாவது:
மாவட்டத்தில் ஒரு கோடியே 5 லட்சம் மாமரங்கள் உள்ளன. மா விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு 60 ஆயிரம் விவசாய குடும்பங்கள், 3 லட்சம் தொழிலாளர்கள், 50 ஆயிரம் மாம்பழ வியாபாரிகள், 50 ஆயிரம் மா மகசூல் குத்தகை தாரர்கள், மாஞ்செடி ஒட்டுதல், பூச்சிக்கொல்லி மருந்து, உரம் விற்பனையாளர்கள் என 5 லட்சத் திற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நிகழாண்டில் வறட்சி மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக மாவிவசாயிகள் முழுமையாக மகசூலை இழந்து, ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை இழப்பினை சந்தித்துள்ளனர். மீண்டும் மாமரங்களை பராமரிக்க வழியின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, அனைத்து மாவிவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
மா பருவத்தில் மாங்கனி களுக்கு உரிய விலை கிடைக் கவும், பிற மாநிலங்களில் வழங்குவது போல் டன் ஒன்றுக்கு ரூ.2500 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மானியத் திட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய், நவீன முறையில் அபகரிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும்.
மாங்கூழ் தொழிற்சாலை
மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும். தோட்டப் பயிர்களுக்கு சொட்டு நீர் மானியத்தில் கருப்பு ரப்பர் குழாய்களுக்கு பதிலாக நிலத்தடியில் அமைக்கும் குழாய்கள் வழங்க வேண்டும். ஆண்டுக்கு விவசாயிகளுக்கு உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மாவிற்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.விவசாயிகளிடம் மனுவை பெற்ற எம்பி செல்லக்குமார், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மாவிவசாயிகள் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கூட்டத்தில் விவசாயி பெரியசாமி நன்றி கூறினார். மாவிவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT