Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

அம்முண்டி கிராம ஊராட்சியில் - ஊரக உள்ளாட்சி தேர்தல் முற்றிலும் புறக்கணிப்பு : காலி வாக்குப்பெட்டிக்கு ‘சீல்’ வைத்து திரும்பிய அதிகாரிகள்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் அம்முண்டி ஊராட்சியில் நேற்று தேர்தலை புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள். அடுத்த படம்: வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகு தேர்தல் பணியில் இருந்த அலுவலர்கள் ஒரு வாக்குக்கூட போடப்படாத வாக்கு பெட்டிக்கு ‘சீல்’ வைத்தனர்.படங்கள்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

அம்முண்டி கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பால் முதற்கட்ட தேர்தலில் ஒரு வாக்கு கூட பதி வாகாமல் அதிகாரிகள் பணியை நிறைவு செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த கிராமத்தில் பட்டியலின பெண்கள் இரண்டு பேர் மட்டும் வாக்காளர்களாக உள்ளனர். எனவே, ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பொது பிரிவுக்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இட ஒதுக்கீடு பிரிவை மாற்ற முடியாது என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், தேர்தலை புறக்கணிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதனால், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதற்கு உட்பட்ட 9 வார்டு உறுப்பினர் பதவி களுக்கும் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை என்பதால் தேர்தல் ஏற்பாடுகள் நடைபெறவில்லை. ஆனால், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்பதால் அம்முண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குச் சாவடி எண் 213 முதல் 217 வரை என மொத்தம் 5 வாக்குச்சாவடி களை அமைத்தனர்.

இந்த ஊராட்சியில் 1,033 பெண்கள், 1,012 ஆண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் 12 பேர் என மொத்தம் 2,057 பேர் வாக்காளர்களாக இருந்தனர்.

ஆனால், தேர்தல் புறக்கணிப்பு காரணமாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலிலும் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. இதனால், வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்தப் பணியும் இல்லாமல் நாள் முழுவதும் அமர்ந்திருந்தனர்.

அதேநேரம், கிராம ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிலரை வாக்களிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவர்களும், கிராம மக்களின் கட்டுப்பாடு காரணமாக வாக்களிக் காமல் பின்வாங்கினர்.

இதையடுத்து, அம்முண்டி ஊராட்சி வாக்குச்சாவடிக்கு 2 துணை காவல் கண்காணிப் பாளர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக் கலாம் என தெரிவித்தனர். இறுதி வரை வாக்காளர்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை என்பதால் அம்முண்டி ஊராட்சிக் கான வாக்குச்சவாடியில் வைக்கப்பட்ட 5 வாக்குப் பெட்டிகளும் ஒரு வாக்குகள் கூட பதிவாகாமல் அதிகாரிகள் ‘சீல்’ வைத்து விட்டு தங்களது பணியை முடித்துக் கொண்டனர்.

இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வாக்குப்பதிவில் கிராம மக்களின் முடிவில் அரசு நிர்வாகம் தலையிட விரும்ப வில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக் கப்படும்.

அதேநேரம், அம்முண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த தேர்தல் பணியில் ஈடுபடும் 5 வாக்காளர்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் அளித்துள் ளோம். அதுவாவது திரும்ப வந்து சேருமா என்பது 12-ம் தேதிதான் தெரியவரும்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x