Published : 05 Oct 2021 03:14 AM
Last Updated : 05 Oct 2021 03:14 AM
விவசாயிகளுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என காங்கிரஸ் எம்.பி செ.ஜோதிமணி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கார் மோதியதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற பிரியங்கா காந்தியை போலீஸார் கைது செய்ததைக் கண்டித்தும் திருச்சியில் காங்கிரஸார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன், கலை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.பி செ.ஜோதிமணி, மாநில துணைத் தலைவர்கள் சுப.சோமு, சுஜாதா மற்றும் நிர்வாகிகள் ராஜா நசீர், வழக்கறிஞர் சரவணன், ரெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாசல மன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார், திடீரென அங்கிருந்து தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட150 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் ஜோதிமணி கூறியது: உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, மத்திய உள்துறை இணையமைச்சர் மகன் சென்ற கார் மோதி விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதன்பின், விவசாயிகளுக்கு ஆதரவாக களத்துக்குச் சென்ற பிரியங்கா காந்தியை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்படவில்லை. கைது நடவடிக்கைகளுக்கு பிரியங்கா காந்தியோ அல்லது காங்கிரஸாரோ பயப்படமாட்டார்கள். எனவே, மத்திய உள்துறை இணையமைச்சர் பதவி விலக வேண்டும். அவரது மகனைக் கைது செய்ய வேண்டும். பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். விவசாய விரோத பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
நாகை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் நாகூர் ரபீக், மாவட்ட துணைத் தலைவர்கள் காதர், விஸ்வநாதன், நகரத் தலைவர் உதயசந்திரன், மாவட்டச் செயலாளர்கள் ராஜ்குமார், ஈசாப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட துணைத் தலைவர் பிச்சைகனி, மாவட்டச் செயலாளர் மஜித், மதர் ஜமால், பொருளாளர் சுகைப் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT