Published : 03 Oct 2021 03:11 AM
Last Updated : 03 Oct 2021 03:11 AM
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெறாத கிராமசபைக் கூட்டம், காந்தி ஜெயந்தி தினமான நேற்று நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் 36 ஊராட்சிகளை தவிர்த்து, மீதமுள்ள 192 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி, ராயர்ஊத்துபதி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யபிரியா தலைமையில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
பின்னர், ஆட்சியர் பேசும்போது, ‘‘பொதுமக்கள் அவரவர் சார்ந்த ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களின் தேவை அறிந்து திட்டங்களை நிறைவேற்ற இக்கூட்டங்கள் வழிவகுக்கின்றன. எனவே, கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். ஊராட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நாயக்கன்பாளையம் ஊராட்சி தன்னிறைவு பெற்ற கிராமமாக திகழ்கிறது’’ என்றார்.
கூட்டத்தில், பொது நிதி செலவினம், கரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், குடிநீர் தேவை, டெங்கு தடுப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கல்குவாரியை மூட கோரிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 234 ஊராட்சிகளில், பல்லடம் வடுகபாளையத்திலும், உள்ளாட்சி இடைத்தேர்தல் காரணமாக 24 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவில்லை. மீதமுள்ள 209 ஊராட்சிகளில் கூட்டம் நடைபெற்றது.பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கோதிபாளையத்தில், ஊராட்சித் தலைவர் கா.வீ.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சு. வினீத் பங்கேற்றார்.
அப்பகுதி பொதுமக்கள், கோடங்கிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முறையான அனுமதியின்றி கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, ஆட்சியரிடம் தங்களது ஆட்சேபனையை தெரிவித்தனர்.
மேலும் கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடியால், கற்கள் வீட்டின் மீது விழுவதாகவும், வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். பொதுமக்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT