Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM
சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகனம், தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், பழைய வாகனம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜூக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் நரேந்திரன், ரவிக்குமார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று முன்தினம் இரவு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் வாகனம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சப் பண பரிமாற்றம் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி மற்றும் இடைத்தரகர்கள் சங்கர் உள்பட 6 பேரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.60,720 மற்றும் ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு ஆர்டிஓ மீது வழக்கு
ஈரோடு அருகே சோலார் கொள்ளுக்காட்டு மேட்டில் ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இரவு 10.30 மணி வரை சோதனை மற்றும் விசாரணை நடைபெற்றது. சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரதீபா, உதவியாளர் சுரேஷ் பாபு, மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் இடைத்தரகர்கள் 6 பேர் என மொத்தம் 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT