Published : 28 Sep 2021 03:19 AM
Last Updated : 28 Sep 2021 03:19 AM

திமுகவின் தோல்வி பயத்தில் அதிமுக வேட்புமனுக்கள் நிராகரிப்பு : முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே திமுகவினர், முறையாக வேட்புமனு தாக்கல்செய்த அதிமுவினரின் மனுக்களை தள்ளுபடி செய்கின்றனர். இதற்காக நீதிமன்றம் சென்றுள்ளோம், எந்த அதிகாரியையும் விடமாட் டோம் என்று முன்னாள்முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நேற்றுபேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி.

அப்போது அவர் பேசுகையில், “திமுக சார்பில் வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகள் எதுவும் செயல்படுத்தாமல் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளது. ஆனால் அதிமுகவை குறை சொல்லியும், பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் வெற்றி பெற்று விட்டனர்.

அதிமுக ஆட்சியில் இருந்த போது, கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் பயில ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் கடந்தாண்டு 412 மாணவர்களை மருத்துவம் பயிலச் செய்துள்ளோம். விவசாயிகள் மீது திமுக அரசுக்கு போதிய அக்கறையில்லை. அதனால் தான் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் முறையாக வேட்பு மனுக்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். ஆனால், திமுக வினரின் தோல்வி பயத்தின் காரணமாக அவர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்? தில்லுமுல்லு செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்பது திமுகவினரின் எண்ணம். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரையும் விடமாட்டோம்.

தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கி, வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அதிமுகவினர் விழிப்போடு இருக்கவேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்,எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர்,செல்லூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x