Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், வாசுதேவ நல்லூர், ஆலங்குளம் வட்டார பகுதிகளில் ரபி பருவத்தில் சுமார் 13,500 ஹெக்டேர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் பரவலாக காணப் பட்டது. அப்போது விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றியதால் படைப்புழுவை கட்டுப்படுத்த முடிந்தது. எனவே நடப்பு ஆண்டிலும் விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
மக்காச்சோளம் சாகுபடிக்கு முன் கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் மண்ணில் உள்ள கூண்டுப்புழுக்கள் வெளிக் கொண்டு வரப்பட்டு வெயில், பறவைகளால் அழிக்கப்படுகிறது. கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். விதைப்பதற்கு முன் பெவேரியா பேசியானா ஹெக்டேருக்கு 200 கிராம் என்ற அளவில் அல்லது சயன்ட்ரானிலிப்ரோல் 19.8 சதவீதம் மற்றும் தயமெத்தோக்சாம் 19.8 சதவீதம் கொண்ட பூச்சி மருந்து 1 கிலோ விதைக்கு 4 மிலி என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
மானாவாரி பகுதியில் வரப்பு பயிராக தீவனச் சோளம் பயிரை மக்காச்சோளம் பயிரை சுற்றி விதைக்க வேண்டும். எள், சூரியகாந்தி, பயறு வகைப் பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும். ஏக்கருக்கு 5 எண்ணம் என்ற அளவில் இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்துபூச்சிகளை கவர்ந்து அழித்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். பயிர் 15 நாள் வயதை தாண்டியவுடன் தேவைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT