Published : 22 Sep 2021 03:06 AM
Last Updated : 22 Sep 2021 03:06 AM
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டில் 101 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இவை அனைத்திலும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொலை வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை, என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரோஜ்குமார் தாகூர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். அதன்பின்னர் குற்ற வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கையை காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இரு தனிநபர் சாட்சியங்கள் முன்னிலையில் வீடியோ பதிவு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 44 குற்றப்பத்திரிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 78 குற்றப்பத்திரிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 68 குற்றப்பத்திரிக்கை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் கூறியதாவது:
இந்திய தட்டணைச் சட்டம் 161/3 சட்டப்பிரிவு 809-ன்படி காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இரு தனிநபர் சாட்சியங்கள் முன்னிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அங்கு வைத்தே குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. அதனால், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற விசாரணையின்போது அதனை மாற்றிச் சொல்ல இயலாது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 44 குற்றப்பத்திரிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் 101 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேந்தமங்கலத்தில் சமீபத்தில் நடந்த முதியவர் கொலையில் 2 மணி நேரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதுபோல் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கட்டணமில்லாத தொலைபேசி எண் 181-க்கு 24 அழைப்புகள், குழந்தைத் திருணம் தொடர்பான 1098 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு 509 அழைப்புகள், சைபர் கிரைம் தொடர்பாக 155260 என்ற கட்டணமில்லாத எண்ணுக்கு 387 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரும் காலங்களில் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் நடக்காத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT