Published : 22 Sep 2021 03:07 AM
Last Updated : 22 Sep 2021 03:07 AM
2 விதிமுறைகளை நிறைவு செய்திருந்தால் மட்டுமே திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி எல்லை விரிவாக்கம் மற்றும் முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது ஆகியன தொடர்பாக பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று கலையரங்க மண்டபத்தில் நடைபெற்றது.
எம்எல்ஏக்கள் எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோ இருதயராஜ், ந.தியாகராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வே.பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஆட்சியர் சு.சிவராசு கூறியது:
கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு சந்தேகங்களை கூறினர். அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
மாநகராட்சியுடன் இணைத் தாலும், தரம் உயர்த்தினாலும் இப்போது பதவியில் உள்ள உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், பதவிக் காலம் முடியும் வரை பதவியில் இருப்பார்கள்.
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 386 பேர் வசிக்க வேண்டும். மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதத்துக்கு அதிகமானோர் விவசாயம் அல்லாத தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் ஆகிய இரு விதிமுறைகளை நிறைவு செய்திருந்தால் மட்டுமே மாநகராட்சியுடன் இணைக்க முடியும்.
நவல்பட்டு, புங்கனூர், மாதவப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூறிய கருத்துகள் பரீசிலனைக்கு உகந்ததாக உள்ளது. மக்கள்தொகை, விவசாயிகள் எண்ணிக்கை ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து அரசுக்குக் கருத்துரு அனுப்பப்படும். திருவெறும்பூர் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் 8 மாதங்களில் முழுமை பெற்றுவிடும்.
பள்ளிகள் திறப்புக்குப் பிறகு திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 13 பேர், ஆசிரியர்கள் 9 பேர் என மொத்தம் 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் செப்.1-ம் தேதி முதல் இதுவரை 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் இதே காலத்தில் 183 ஆகவும், 2019-ல் 262 ஆகவும் டெங்கு பாதிப்பு இருந்தது. பாதிப்பு குறைவாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்கள் ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்த 2,655 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT