Published : 22 Sep 2021 03:07 AM
Last Updated : 22 Sep 2021 03:07 AM
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் நேற்று பகலில் கோடையை விஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. அதேநேரத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மூலைக்கரைப்பட்டியில் 77 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
திருநெல்வேலி, பாளையங் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேர வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. அவ்வப்போது வானில் மேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் இருந்தாலும், மழை பெய்யாமல் ஏமாற்றம் அளித்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் பகல்நேர வெப்பநிலையைப்போல தற்போதும் வெப்பநிலை காணப்படுகிறது. நேற்று பகலில் வெயில் சுட்டெரித்ததால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதியுற்றனர். பெருமாள்புரம், மகாராஜ நகர் பகுதி சாலைகளில் கானல்நீர் தெரியும் அளவுக்கு வெப்பம் தகித்தது.
அதேநேரத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 77 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் ராதாபுரத்தில் 53 மி.மீ., நம்பியாற்றில் 4 மி.மீ., களக்காட்டில் 2.6 மி.மீ. மழை பெய்திருந்தது.
143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 80.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 516 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 758 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 62.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT