Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM
விழுப்புரம் அருகே டிராக்டர், காரில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிகளுக்கு வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் நேற்று பனையபுரம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் போலீஸாரை பார்த்ததும் நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு அதில் வந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். பின்னர் அந்த டிராக்டரை போலீஸார் சோதனை செய்தனர். அதன் டிப்பரில் உள்அறைகள் அமைத்து அதில் 40 அட்டைப்பெட்டிகளில் 1,920 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், விக்கிரவாண்டி அருகே விஸ்வரெட்டிப்பாளையத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் முரளி (33) என்றும், தப்பி ஓடியவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்றும் தெரியவந்தது. இருவரும் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து முரளியை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள டிராக்டர், டிப்பரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிவக்குமாரை தேடி வருகின்றனர்.
இதேபோல் பனையபுரம் சோதனைச்சாவடி வழியாக வந்த கார் ஒன்றை போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரினுள் 10 அட்டைப்பெட்டிகளில் 432 மதுபாட்டில்கள் இருந்தன. கார் ஓட்டுநரான புதுச்சேரி மாநிலம் செத்திப்பட்டு பகுதியை சேர்ந்த அய்யனார் (23) புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்ததுள்ளார். இதையடுத்து அய்யனாரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT