Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புரசலூரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது சுமார் 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது.
திருச்சுழி அருகே உள்ள புரசலூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது, புதைந்திருந்த ஒரு சிற்பம் வெளிப்பட்டதாக, அவ்வூரைச் சேர்ந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் செ.ரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுருவுக்குத் தகவல் தெரிவித்தார்.
இச்சிற்பத்தை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது: இந்தச் சிற்பம் உடன் கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்ட பெண்ணுக்கு வைத்த சதிக்கல் ஆகும். போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை, சங்கக் காலம் முதல் தமிழ்நாட்டில் இருந்துள்ளது. அதுபோல் போரிலோ, வேறு காரணங்களாலோ கணவர் உயிரிழந்தால், அவருடனோ அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி உயிர் துறந்த பெண்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைத்து வழிபடும் வழக்கமும் இருந்துள்ளது.
இவற்றை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைக்கிறார்கள்.
சதி, மாலை ஆகிய சொற்களுக்கு பெண் என்றும் பொருள் உண்டு. இந்நிலையில் புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் 2.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்டது. இதில் ஆண் வலது கையையும், பெண் இடது கையையும் தொடையில் வைத்துள்ளனர். ஆண் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டும், பெண் இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில் உள்ளனர். ஆண் இடது கையில் கட்டாரி எனும் குத்துவாளையும், பெண் வலது கையில் பூச்செண்டையும் ஏந்தி உள்ளனர்.
தலையிலுள்ள கொண்டை ஆணுக்கு வலப்புறமும் பெண்ணுக்கு இடப்புறமும் சரிந்துள்ளது. இருவரும் நீண்ட காதுகளுடன் கழுத்திலும், காதிலும் அணிகலன்கள் அணிந்து காணப்படுகின்றனர்.
சிற்பத்தின் மேற்பகுதி, கபோதம், கண்டம், கலசங்கள் ஆகிய பகுதிகளுடன் கோயிலின் சாலை விமானம் போன்ற அமைப்பில் உள்ளது. சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் காலை தொங்கவிட்டு அமர்ந்தநிலையில் ஊஞ்சலாடும் ஒரு பெண்ணின் சிறிய சிற்பம் உள்ளது.
இச்சதிக்கல் அமைப்பைக் கொண்டு பார்க்கும்போது, இது கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். இப்பள்ளியின் வடக்குப் பகுதியில் ஏற்கெனவே 2 சதிக்கற்கள் மக்கள் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு இவ்வூரில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT