Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான 3-வது நாளான நேற்று ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அரசியல் கட்சியினர் பலரும் திரண்டதால் கட்சி அலுவலகங்கள் களைகட்டியிருந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று 3-வது நாளாக நடைபெற்றது. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு தாக்கலையொட்டி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். மணப்படைவீடு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட பட்டதாரி பெண் சிவலட்சுமி (28) வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கலுக்குப்பின் பிரசாரத்துக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்ட ஜீப்பில் ஏறி அவர் சென்றார்.
`உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் தங்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம்’ என்று திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அறிவித்திருந்தன. அதன்படி பல்வேறு கட்சி அலுவலகங்களிலும் அந்தந்த கட்சியினர் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். திமுக மற்றும் அதிமுக அலுவலகங்களில் நேற்று ஏராளமானோர் திரண்டு விருப்ப மனுக்களை அளித்ததால் அந்த கட்சி அலுவலகங்கள் களைகட்டியிருந்தன.
தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து அக் கட்சி நிர்வாகிகள் நேற்று விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனர். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இப்பணிகளை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் எம்எல்ஏ ஏஎல்எஸ் லட்சுமணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதிமுக சார்பில் போட்டியிடு வோர் தங்கள் விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளர் கணேசராஜாவிடம் அளித்தனர். இதனால் அதிமுக அலுவலக த்திலும் அதிக கூட்டம் காணப் பட்டது. முக்கிய கட்சிகள் இப்போதுதான் விருப்ப மனுக்களைப் பெறுகின்றன. எனவே, அவை வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவித்த பின்னரே, வேட்புமனு தாக்கல் சுறுசுறுப்படையும்.
தென்காசியில் 794, நெல்லையில் 625 பேர் மனு தாக்கல்
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 15 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 112 பேரும், ஊராட்சி உறுப்பி னர் பதவிக்கு 434 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 794 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத் தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை, 625 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 10 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 139 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 476 பேருமாக மொத்தம் 625 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT