Published : 16 Sep 2021 03:13 AM
Last Updated : 16 Sep 2021 03:13 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. விண்ணப்பத்தை வாங்கிச் செல்வதில் பலரும் ஆர்வம் காட்டினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில், 2,069 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை மற்றும் பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. 2-ம் கட்டமாக களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று தொடங்கியது.
ஆனால், முக்கிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் நேற்று மனுத்தாக்கல் செய்யவில்லை. அதேநேரத்தில், பலரும் வேட்புமனு படிவங்களை பெற்றுச்சென்றனர். வேட்புமனு தாக்கல் தொடங்கியதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை யொட்டி 5 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒருவர், 3 காவல்துறை அலுவலர்கள் மற்றும் வீடியோ பதிவாளர் ஒருவர் என மொத்தம் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பறக்கும்படையினர் பல்வேறு இடங்களிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மானூரில் பஜார் மற்றும் பிள்ளையார்குளம் விலக்கு பகுதி களில் இச்சோதனை நடைபெற்றது.
வேட்புமனு தாக்கல் வரும் 20-ம் தேதிக்குப்பின் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட கவுன்சிலர், 122 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். முக்கிய கட்சிகள் சார்பில் கூட்டணி ஒப்பந்தத் துக்குப்பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகே, அவர்கள் மனுத்தாக்கல் செய்வார் கள்.
தென்காசியில் 72 பேர் மனு தாக்கல்
ஆலங்குளம் ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 4 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 பேர், கடையம் ஒன்றியத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், கடையநல்லூர் ஒன்றியத்தில் 2 பேர் மனு தாக்கல் செய்தனர்.
கீழப்பாவூர் ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 2 பேர், உறுப்பினர் பதவிக்கு 9 பேர், , குருவிகுளம் ஒன்றியத்தில் இப்பதவிக்கு 6 பேர், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேர், சங்கரன்கோவில் ஒன்றியத்தில் உறுப்பினர் பதவிக்கு 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
செங்கோட்டை ஒன்றியத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், தென்காசி ஒன்றியத்தில் 6 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர், வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 64 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 8 பேர் என மொத்தம் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT