Published : 15 Sep 2021 03:12 AM
Last Updated : 15 Sep 2021 03:12 AM

வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் - ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விட்டால் நடவடிக்கை : ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடுவது தெரியவந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. இது தொடர்பான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பின்னர், வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு ஆகிய ஒன்றியங்களுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், 9 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 88 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 154 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,302 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப் படும்.

இரண்டாம் கட்டமாக வரும் அக்டோபர் 9-ம் தேதி வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றி யங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், 5 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 50 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 93 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 777 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.

தேர்தலையொட்டி 1,331 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 282 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அக்டோர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, மாவட்டத்தில் 7 இடங் களில் வாக்கு எண்ணிக்கை மையங் கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தீவிர சோதனை நடத்தப்படும். திருவண்ணாமலை மாவட்ட எல்லை, ஆந்திர எல்லை களில் கூடுதல் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். திருமண மண்டபங்கள் தீவிரமாக கண் காணிக்கப்படும்.

தேர்தல் அதிகாரிகளின் அனு மதியின்றி மண்டபங்களை வாடகைக்கு விடக்கூடாது. மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க உதவி ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் தலைமையில் பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்படும்.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மாவட்டத்தில் பேனர்கள் வைக்கவோ, அனுமதி யின்றி பிரசாரத்தில் ஈடுபடவோ, சுவர் விளம்பரங்கள் செய்யவோ, கூட்டத்தை கூட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடவோ கூடாது’’ என்றார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x