Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் இலக்கைவிட அதிகம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஊரகப் பகுதிகளில் 1,167 முகாம்கள், மாநகராட்சிப் பகுதிகளில் 308 முகாம்கள் என மொத்தம் 1,475 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. மொத்தம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக காத்திருப்பவர்கள் மெகா தடுப்பூசி முகாமில் அதிக ஆர்வம் காட்டினர்.
இதனால், சூலூர், கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், பதுவம்பள்ளி, கரும்புக்கடை உள்ளிட்ட சில இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பலர் தடுப்பூசிக்காக காத்திருந்தனர். ஆர்வமுடன் வந்த மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ரயில்நிலையத்தில்...
வ.உ.சி.மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், வாகனத்தில் வந்த முதியவர்களுக்கு வாகனத்திலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேரில் வர முடியாத மாற்றுத்திறனாளிகள், முதியோரின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த 5 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவையில் நேற்று மொத்தம் 1,00,330 முதல் தவணை தடுப்பூசிகள், 51,355 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 1,51,685 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாகும்" என்றனர். கோவையில் சில இடங்களில் இரவு 8 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
திருப்பூர்
மாவட்ட நிர்வாகம் நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 727 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் அதிகமாகும்.
நீலகிரி மாவட்டம்
குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி சமுதாய நலக்கூடத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அமைச்சர் பேசும்போது, “நீலகிரி மாவட்டத்தை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக மாற்ற வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார். கண்காணிப்பு அலுவலர் பொ.சங்கர், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் வண்டிசோலை பேருந்து நிலையம், குன்னூர் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம், பர்லியார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தனர்.நீலகிரி மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் 184 மையங்கள், பேரூராட்சி பகுதிகளில் 72 மையங்கள், நகராட்சிப் பகுதிகளில் 39 மையங்கள் என மொத்தம் 295 சிறப்பு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு 30,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாலை 7 மணி வரையில் 29 ஆயிரத்து 358 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT