Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM
கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம்அடுத்த மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநரும், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான வி. தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை நேற்று ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்தட்சிணாமூர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக, கொடிவேரி கதவணைக்கு மேலே, பவானி ஆற்றின் கரையில் நீரேற்று நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்படவுள்ளது. இந்த கிணற்றிலிருந்து குடிநீரானது 29 ஆயிரத்து 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவுள்ள பிரதான இயல்பு நீர் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள், 547 வழியோர ஊரக குடியிருப்புகள், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும்.
தற்போது தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் 25 முதல் 45 லிட்டரும், பேரூராட்சிப் பகுதிகளில் 60 லிட்டரும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம், பற்றாக்குறை சரிசெய்யப்படும். ரூ.227 கோடி மதிப்பிலான இத்திட்டப்பணிகள் 91 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு, அக்டோபர் மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் செங்குட்டுவன், கண்காணிப்பு பொறியாளர் முரளி, நிர்வாக பொறியாளர்கள் உலகநாதன், மணிவண்ணன் (பெருந்துறை), உதவி நிர்வாக பொறியாளர் ரவிராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT