Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் - ரூ.28.31 கோடியில் 'ஸ்டெம்' பூங்கா : பணிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் ஸ்டெம் பூங்கா பணிகளை தொடங்கி வைத்து, மாதிரி வரைபடத்தை அமைச்சர் பெ.கீதாஜீவன் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் தி.சாரு. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.28.31 கோடியில் 9 ஏக்கர் பரப்பளவில் 'ஸ்டெம்' பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாவட்ட அறிவியல் மையத்துக்கு இணையாக பிரம்மாண்டமான வகையில் அறிவியல் பூங்கா அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 9 ஏக்கர் பரப்பளவில் ரூ.28.31 கோடியில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவை ஒருங்கிணைந்த 'ஸ்டெம்' பூங்காவாக (STEM: Science, Technology, Engineering and Maths) இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.

இந்த பூங்காவில் மினி திரையரங்கம், அறிவியல் மண்டலம், ஆற்றல் மண்டலம், கணித மண்டலம், பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் விண்வெளி மண்டலம், பரிமாண மாதிரிகள், உட்புறக் கண்காட்சிகள், ஒரு கோளத்தின் அறிவியல், மெய்நிகர் கண்காட்சிக் கூடம், கண்டுபிடிப்பு மையம் போன்றவை அமைக்கப்படுகின்றன.

மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் இந்தப் பூங்கா உருவாக்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வசதி, ஓய்வு அறை, கழிப்பறைகள், கேன்டீன், வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன. இதனை தவிர சிறுவர் விளையாட்டு பூங்காவும் இந்த வளாகத்தில் அமைக்கப்படுகிறது.

இப்பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் தி.சாரு முன்னிலை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பூங்கா பணிகள் 12 மாதங்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x