Published : 09 Sep 2021 03:16 AM
Last Updated : 09 Sep 2021 03:16 AM

திருநெல்வேலி மாவட்டத்தில் - மரங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் :

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மரங்கள் கணக்கெடுப்பு பணியை ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார். படம்: மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

தமிழகத்தில் பொது இடங்களில் காணப்படும் மரங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை 2-ம் தேதி வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சகம் அரசாணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து மாநில அளவில் ஒரு பசுமை குழுவும், மாவட்ட அளவில் ஒரு பசுமை குழுவும் அமைக்க அறிவுறுத்தப்பட்டு, பசுமை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் மரங்களை பாதுகாப்பது, மரங்கள் வெட்டப்படுவதை முறைப்படுத்துவது, தேவையான இடங்களில் மரங்களை நடுவதற்கு ஆவன செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகமானது, வனத்துறை, மணிமுத்தாறில் செயல்படும் அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து தொடங்கியுள்ளது.

இதன் தொடக்க விழா திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மரங்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் மரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 100 ஆண்டுகள் பழமையான 153 கோயில்களில் உள்ள மரங்கள் கணக்கெடுக்கப் படுகிறது. தொடர்ந்து பொது இடங்களில் உள்ள மரங்கள் கணக்கெடுக்கப்படுகிறது. இப்பணியில் 30 தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர் என்றார்.

மாவட்ட வன அலுவலர் முருகன், அறிவியல் மைய அதிகாரி முத்துகுமார், அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்துகொண்டனர்.

முதற்கட்டமாக 153 கோயில்களில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் கணக்கெடுக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x