Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM
தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விரும்புவோர் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நவம்பர் மாதம் 4-ம் தேதி வியாழக்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையின் போது கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளை கடைபிடித்து, இணையதளம் அல்லது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் வெடிமருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008-ல் உள்ள விதி 84-யை முறையாக கடைபிடித்து, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு முந்தைய காலங்களில் தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பத்துடன் ஏற் கெனவே பெற்ற உரிம நகலினை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
உரிமம் கோரி விண்ணப்பிக்கும் போது கடையின் வரைபடம் - 6,. உரிமம் கோரும் இடத்தின் உரிமை யாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல் (அசல் மற்றும் 5 நகல்), உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில் இடத்தின் கட்டிட உரிமையாளாரிடம் ரூ.20க்கான முத்திரைதாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமக்கட்டணம் ரூ.500 செலுத்தியதற்கான அசல் சலான்,வீட்டு முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டின் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள இரு வண்ணப் புகைப்படம்- ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அரசு உத்தரவின்படி வரும் 30-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் விண்ணப்பிக்கும், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு அக்டோபர் 15-ம் தேதிக்கு பின்னர் தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT