Published : 07 Sep 2021 03:15 AM
Last Updated : 07 Sep 2021 03:15 AM
குற்றாலம் நகர காங்கிரஸ் தலைவர் பழனிச்சாமி தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், ‘சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதித்தால் மட்டுமே, இப்பகுதியில் உள்ள வியாபாரிகள், குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு, வல்லம், தென்காசி பகுதிகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பயனடைவார்கள். குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாததால் இந்துசமய அறநிலையத் துறைக்கும், குற்றாலம் பேரூராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய கட்டுப்பாடுகளுடன் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், “அதிமுக ஆட்சியில் 3 முறை பணி நீக்கம் செய்யப்பட்டு, 4-வது முறையாக பணிநியமனத்துக்காக போராடிக்கொண்டு இருக்கிறோம். சென்னைஉயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 1990 முதல் பணிக்காலமாக அறிவித்து, அதற்குரிய பணப்பலன் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து பலன்களும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம், அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடத் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் அளித்த மனுவில், “தென்காசி மாவட்டத்தில் 15 ஊர்களில் வீடு இல்லாத அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
கடையநல்லூர் வட்டம், கடம்பனேரி புதுக்குடி பகுதி மக்கள் சார்பில் சுடலை என்பவர் அளித்துள்ள மனுவில், ‘கடம்பனேரி புதுக்குடியில் ஏழை மக்களின் வீட்டுமனைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள கல் குவாரியை மூட வேண் டும். இதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் இருந்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மக்களின் நிலங்களை மீட்டுக்கொடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT