Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM
டெய்லரிடம் ரூ.10 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி, போலீஸ் காவலில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அடம் பிடிப் பதாகக் கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த பேக் தைக்கும் டெய்லர் அர்சத். இவரிடம் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி விசாரணை என்ற பெயரில் ரூ.10 லட்சம் பறித்ததாக நாகமலை புதுக்கோட்டை பெண் காவல் ஆய்வாளர் வசந்தி உட்பட 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ் வழக்கில் ஏற்கெனவே உக்கிரபாண்டி, பால்பாண்டி, கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் வசந்தி கோத்தகிரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரது உறவினர் பாண்டியராஜுவையும் கைது செய்தனர்.
இவ்வழக்கில் வசந்தியை 4 நாள் காவலில் எடுத்து விசா ரிக்க அனுமதிகோரி, மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்தி ருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து டிஎஸ்பி ரவிக்குமார் தலைமையில் ஆய்வாளர் சுதந்திராதேவி அடங்கிய குழுவினர் பெண் காவல் ஆய்வாளர் வசந்தியிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவரிடம் 69 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் எந்த கேள்விக்கும் அவர் முறையாக பதில் அளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து அடம் பிடிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: வசந்தியை கைது செய்தபோது அவரிடம் சரியாக விசாரிக்க முடியாமல் காவலில் எடுத்தோம்.
ஆரம்பத்தில் கூடுதல் டிஎஸ்பி சந்திரமவுலியிடம் கூறிய தகவல்களை மட்டுமே ஒப்புக்கொண்டார். பிற கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
பணம், சம்பவம் தொடர்பாக எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்காமல் அடம் பிடித்தார். திண்டுக்கல்லில் அவர் மீது ஒரு வழக்கு இருப்பதை மட்டும் ஒப்புக் கொண்டார். முழு விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றனர்.
இதனிடையே நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காவல் ஆய்வாளர் வசந்தி நிலக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT