Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM
ஆஸ்திரேலிய வாழ் தமிழ் குழந்தைகளுக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி இணையவழி மூலம் திருக்குறள் கற்றுத் தருகிறார்.
தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருகே உள்ள கிட்டப்பா வட்டாரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்-சாந்தி தம்பதியின் மகள் தேவ(14). இவர், அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 5-ம் வகுப்பு படிக்கும்போது 1,330 குறள்களையும் முழுமையாகப் படித்து, ஒப்பித்தவர். தொடர்ந்து, 2 ஆண்டுகளாக தனது வீட்டு வாசலில் திருக்குறள் பலகை அமைத்து, அதில் நாள்தோறும் திருக்குறளையும், அதற்கான பொருளையும் விளக்கி எழுதி வருகிறார். இதுதொடர்பான தகவல்களை இணையதளத்தில் பார்த்த ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள், தங்களது குழந்தைகளுக்கு திருக்குறள் கற்றத்தர தேவயை தொடர்புகொண்டு கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் நாள்தோறும் இணையவழி மூலம் ஆஸ்திரேலிய வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு திருக்குறள் வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறார். இதில், 5 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட 13 பேர் திருக்குறள் கற்று வருகின்றனர். இதுவரை 34 அதிகாரங்களிலிருந்து 340 திருக்குறள்களை தேவ கற்றுத் தந்துள்ளார்.
இதுகுறித்து தேவ கூறியது: திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில், ஆஸ்திரேலிய குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறேன். நாள்தோறும் பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை ஆஸ்திரேலிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் கற்றுத் தருகிறேன். இது, ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை. இதில், ஒவ்வொரு நாளும் 2 திருக்குறள் கற்றுத் தருகிறேன். சனிக்கிழமை மட்டும் வகுப்பு கிடையாது. ஒருவாரம் முழுவதும் கற்பிக்கப்படும் 10 குறள்களும் ஞாயிற்றுக்கிழமை திருப்புதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பிழையின்றி திருக்குறளை ஒப்பிக்கின்றனர். இந்தப் பணி செய்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் தேவ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT