Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM

தியாகி பூலித்தேவன் பிறந்த நாள் - நெற்கட்டும்செவலில் ஆட்சியர் மரியாதை :

நெற்கட்டும்செவலில் விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி/ திருநெல்வேலி/கோவில்பட்டி

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும்செவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

அங்குள்ள பூலித்தேவன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) , சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி உள்ளிட்டோரும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் சார்பில் பூலித்தேவரின் பிறந்தநாள் விழா நடந்தது. இயக்க நிறுவனத் தலைவர் எஸ்.செல்லத்துரை என்ற செல்வம் தலைமை வகித்தார். கடம்பூர் செ.ராஜூவின் மகன் அருண் பங்கேற்று பூலித்தேவர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் கே.சங்கர பாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் பூலித்தேவன் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.முகம்மது மீரான், மதிமுக மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ், ஆதி தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் கலை கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்ட தமிழர் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமை வகித்தார். தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் அ. வியனரசு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் அப்துல்ஜப்பார், சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x