Published : 01 Sep 2021 03:17 AM
Last Updated : 01 Sep 2021 03:17 AM

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு :

கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பி.என்.தர் வெளியிட்டார்.

விழுப்புரம்\கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் நேற்று வெளியிட்டார்.

மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 688 ஊராட்சிகளில் அடங்கிய 5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கான ஆண் வாக்காளர்கள் 6,87,420, பெண் வாக்காளர்கள் 6,96,115 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 152 என மொத்தம் 13,83,687 வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்காக தயார் செய்யப்பட்ட புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தொடர்புடைய 13 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கியுள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் தேர்தல் நடத்தும்அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நேற்று வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வாக்காளர் பட்டியல்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், திமுக பிரமுகர்கள் புஷ்பராஜ், ஜெயசந்திரன், சர்க்கரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.தர் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள19 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 412 கிராம ஊராட்சிகள் மற்றும்3,162 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளடக்கிய நிறைவு செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வெளியிடப்பட்டன.

மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 4,83,772 ஆண் வாக்காளர்களும், 4,77,812 பெண் வாக்காளர்களும், 186 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 9,61,770 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் எனத் தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சு.குமாரி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x