Published : 29 Aug 2021 03:14 AM
Last Updated : 29 Aug 2021 03:14 AM

மலேசியாவில் இருந்து ஊர் திரும்பியபோது - விமானத்திலேயே நடுவானில் உயிரிழந்த இளைஞர் :

திருச்சி

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகேயுள்ள நீர்பழனியை அடுத்த நரியப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன்(36). கடந்த 4 வருடங்களாக மலேசியாவிலுள்ள ஒரு சலூன் கடையில் பணியாற்றி வந்த இவருக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சொந்த ஊர் திரும்பி சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பினார். இதற்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் மலேசியாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டார்.

காலை 8 மணியளவில் அந்த விமானம் திருச்சிக்கு வந்து சேர்ந்தவுடன், அதிலிருந்த பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் வேல்முருகன் மட்டும் அமர்ந்த நிலையிலேயே இருந்ததால், விமான பணியாளர்கள் சந்தேகத்தின்பேரில் அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த தகவல் அவரை வரவேற்க வந்திருந்த மனைவி நிஷா மற்றும் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் விமானநிலைய வாசலிலேயே கதறி அழுதனர்.

அப்போது, விசா காலம் முடிந்த பிறகும் கடந்த ஓராண்டாக வேல்முருகனை அங்கேயே கட்டாயப்படுத்தி தங்க வைத்து தொடர்ந்து வேலை வாங்கியதாகவும், உடல்நலக்குறைவுக்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே வேல்முருகனின் மரணத்துக்கு காரணம் எனவும் வேல்முருகன் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக மலேசியாவிலுள்ள அந்த சலூன் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x