Published : 28 Aug 2021 03:14 AM
Last Updated : 28 Aug 2021 03:14 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - ஆக்கிரமிப்புகளால் திணறும் நீர்நிலை, வரத்து வாய்க்கால்கள் : குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் .

கள்ளக்குறிச்சி

ஆக்கிரமிப்புகளால் திக்கித் திணறும் நீர்நிலை, வரத்து வாய்க்கால்களை சரி செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த ஓராண்டுக்குப் பின் நேரடியாக விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கள்ளக்குறிச்சியில்நேற்று ஆட்சியர் பி.என்.தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்: உளுந்தூர்பேட்டை வட்டம் கணையாரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை மட்டும் தான் எடை போடுகின்றனர். விவசாயிகளின் நெல்மூட்டைகள் மாதக்கணக்கில் எடை போடாமல் காத்திருக்க வேண்டி உள்ளது. நில அளவீடு செய்ய நில அளவையர்களுக்கு விண்ணப்பித்து அழைத்தால், அளவீடு சங்கிலியை எடுக்கும்போது காசு கேட்கின்றனர்.

கிண்டலாக பதிலளித்த நேர்முக உதவியாளர்

கள்ளக்குறிச்சி விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிலர் கீழ் நிலை அலுவலர்களிடத்தில் மனு அளிக்கும் போது அவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து தாங்கள் எதிர்கொண்ட சம்பவங்களை கூறினர். உதாரணமாக பிஎம் கிசான் முறைகேடு மற்றும் நில அளவையர்களின் செயல்பாடு, மின்சார வாரியத்தினரின் அலட்சியம் குறித்து எடுத்துரைத்தனர். அப்போது கூட்டத்தை வழிநடத்திக் கொண்டிருந்த ஆட்சியரின் வேளாண்துறை நேர்முக உதவியாளர் விஜயராகவன், விவசாயிகளிடம் கிண்டலாக பதிலளித்தார். உங்கள் கேள்வி போதும் என்றும், அடுத்து கூட்டத்தில் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறி ஒவ்வொரையும் பேச விடாமல் தடுத்துக் கொண்டேயிருந்தார். அப்போது ஆட்சியர் குறுக்கிட்டு `விவசாயிகளை பேச விடுங்கள்’ என்றார். ஓராண்டுக்குப் பின் நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள் பக்கம் நின்று பேச வேண்டிய வேளாண்துறை நேர்முக உதவியாளரே, விவசாயிகளை அலட்சியப்படுத்துவது வேதனையாக உள்ளது எனக் கூறிக்கொண்டே கூட்ட அரங்கை விட்டு விவசாயிகள் வெளியேறினர். உளுந்தூர்பேட்டை மின்பகிர்மான கழகத்தினர் வீட்டிற்கு வராமலேயே மின் கணக்கீடு செய்வதால், ஒவ்வொருக்கும் ஆயிரம், இரண்டாயிரம் என மின் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கின்றனர். இதை ஒழுங்குபடுத்தவேண்டும். கெடிலம் ஆற்றையும், தென்பெண்ணை ஆற்றையும் இணைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஏரிகளுக்கு நீர்பாசன வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பின் போதிய விலை கிடைப்பதில்லை. வெளிமாநில பயிர்கள் வரத்தால், உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்த பயிர்கள் தேக்கமடைந்து அவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே சந்தையில் விற்பனையாகும் பயிர் ரகங்கள் குறித்து, அவை பயிரிடும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதன்படி சாகுபடி செய்து சந்தைப்படுத்தலுக்குரிய வழிமுறைகளை வழங்க வேண்டும். கால்நடை மருத்துவமனைகளை அதிகரித்து, அதற்குரிய மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான நீர் நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே ஆட்சியர், சிறப்பு கவனம் எடுத்து நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பையும், நீர் வரத்து வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பையும் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்த ஆட்சியர் பி.என்.தர் கூறியது: நீர் நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நிலவும் குறைபாடுகள் சரிசெய்யப்படும். சந்தைப்படுத்ததலுக்குரிய பயிர் ரகம் குறித்து ஆய்வுசெய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x