Published : 26 Aug 2021 03:15 AM
Last Updated : 26 Aug 2021 03:15 AM
கரோனா பரவல் காரணமாக மூடப் பட்டிருந்த அமிர்தி பூங்கா கடந்த 5 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை திறக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் அமிர்தி வனப்பகுதியில் உள்ள வனவிலங்குப் பூங்கா கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 5 மாதங்களுக்கு பிறகு அமிர்தி பூங்கா நேற்று காலை திறக்கப்பட்டது. இதையடுத்து, அமிர்தி பூங்காவில் விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளை சுற்றிலும் பிளீச்சிங் பவுடர், மஞ்சள் பொடி ஆகியவை நேற்று முன்தினம் தெளிக்கப்பட்டது. பூங்கா நேற்று காலை திறக்கப்பட்டது. பூங்காவை சுற்றிப் பார்க்க வந்த பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின்னர் சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பூங்காவின் நுழைவாயில் பொட்டாசியம் தெர்மானேட் கிருமி நாசினி கொண்டு அனைத்து பார்வை யாளர்கள் கால்கள் கழுவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமிர்தி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், அமிர்தி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. 5 மாதங்கள் கழித்து அமிர்தி பூங்கா நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘அமிர்தி பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனையின்போது அதிகளவில் வெப்பநிலை பதிவானால் பூங்கா உள்ளே யாரையும் அனுமதிக்க முடியாது. பூங்காவுக்குள் சுற்றுலாப் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
விலங்குகளை எந்தவித தொந்தரவும் செய்யாமல் பார்வை யிடலாம். பூங்காவில் குப்பைக் கழிவுகளை வீசக்கூடாது, பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது.
உணவுப்பொருள் கழிவுகளை ஆங்காங்கே வீசக் கூடாது. பூங்கா வில் மேற்கொண்டுள்ள நோய்த் தடுப்புப் பணிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும்’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT