Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM
இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள பயிர் காப்பீடு செய்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள விழுப்புரம் ஆட்சியர் மோகன், பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையையும் அறிவித்துள்ளார்.
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் வேளாண் துறை சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் மோகன் கூறியது:
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து. பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மானாவாரியாகப் பயிரிடப்பட்டுள்ள கம்பு. மணிலா. மரவள்ளி மற்றும் வாழை பயிர்களில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மணிலா மற்றும் கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் இம்மாதம் 31-ம்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யலாம். வாழை மற்றும் மரவள்ளிசாகுபடி செய்துள்ள விவசாயிகள் செப்டம்பர் 15-ம் தேதிக்குள்பயிர் காப்பீடு செய்யலாம்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக ‘AICL’ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் மணிலாவுக்கு ரூ 525,62, கம்புக்கு ரூ176.36, வாழைக்கு ரூ.1842.62, மரவள்ளிக்கு ரூ.1385.68 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும், பொது சேவை மையங்கள். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையை செலுத்தி பதிவு செய்ய வேண்டும், அடங்கல். சிட்டா. வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர். நிலப்பரப்பு. சர்வே எண். உட்பிரிவு. பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வேளாண் இணை இயக்குநர் ரமணன், விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பிரபாகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, இந்தியன் வங்கி மாவட்ட முன்னோடி மேலாளர் ஹரிஹரசுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT