Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM

விழுப்புரத்தில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு :

விழுப்புரத்தில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். அருகில் ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் உள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 9.1.2000 அன்று. விழுப்புரத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் வந்து. 48 கடைகளுடன் கூடிய உழவர் சந்தையை திறந்து வைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்புமின்றி கிடப்பிலிருந்த உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்திடும் பொருட்டு, தமிழக அரசு உழவர் சந்தைகளை திறந்து வருகிறது. அதன்படி, இந்த புதுப்பிக்கப்பட்ட கடை திறக்கப்படுகிறது.

இதற்காக விழுப்புரம் உழவர் சந்தையில் தரைதளம் மற்றும் மேற்கூரை புதிதாக ஏற்படுத்தப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு, ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய சாலை, குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டிருக்கிறது.

இச்சந்தையில் நாளொன்றுக்கு சராசரியாக 60 முதல் 70 விவசாயிகள் மூலம் 12 டன் வரை விளைபொருட்கள் விற்பனை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 1,500 பேர் பயன்பெறுவார்கள் என்றார்.

தொடர்ந்து, இச்சந்தையில் விற்பனை செய்யும் விவசாயி களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 10 பேருக்கு மானியத்துடன் மழைத்தூவான் கருவி, உளுந்து விதை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தோட்டக்கலைத்துறை சார்பாக மானியத்துடன் 6 பேருக்கு நுண்ணீர் பாசன அமைப்பு, கத்தரி குழித்தட்டு நாற்று, மிளகாய் குழிநட்டு நாற்று உள்ளிட்டவைகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

பின்னர் கூட்டுறவுத்துறை சார்பில் ஆயந்தூர், புரவடை கிராமங்களில் புதிதாக பகுதி நேர நியாயவிலைக் கடைகளை அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண் துறை இணை இயக்குநர் ரமணன்,வேளாண் துணை இயக்குநர் கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x