Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM
ஈரோடு அருகே கீழ் பவானி கால்வாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக விளை நிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனக் கால்வாயில் திறக்கப்படும் நீரின் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. 200 கிமீ நீளம் கொண்ட இந்த கால்வாயை சீரமைக்க கடந்த பிப்ரவரி மாதம் ரூ.710 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியவிலாமலை ஊராட்சி, கண்ணவேலம்பாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி கால்வாயில் நேற்று முன்தினம் கசிவு ஏற்பட்டது.
முதலில் சிறிய அளவில் இருந்த விரிசல் நேற்று காலையில், பெரிதாகி கான்கிரீட் தளத்தில் உடைப்பு ஏற்பட்டது. பாசனத்துக்கு திறக்கப்பட்ட பல ஆயிரம் கனஅடி தண்ணீர், விவசாய விளைநிலங்களிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து சேதமடைந்தன.
இதன் காரணமாக முள்ளம்பட்டி ஊராட்சி வரவங்காடு, கரைக்காடு, மலைப்பாளையம் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. மேலும், தொழுவத்தில் இருந்த ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. நெல், கரும்பு, மஞ்சள், வாழை பயிர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
உடைப்பு ஏற்பட்ட பகுதியில், வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். உடைப்பு காரணமாக, கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட போதிலும், கால்வாயில் இருந்த தண்ணீர் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக பெருக்கெடுத்து ஓடியது. இதுவரை மொத்தம் 64 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும், வெள்ளம் வடிந்த பிறகே முழுமையான சேத விவரங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ. கோரிக்கை
பெருந்துறை எம்.எல்.ஏ. எஸ்.ஜெயக்குமார், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் மூலம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதியளித்தார். விவசாய விளை நிலங்கள் மட்டுமல்லாது, பொது மக்களுக்கும் தேவையான இழப்பீடுகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ. ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT