Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM

திருச்சி – தஞ்சாவூர் சாலையில் - பழைய பால்பண்ணை சந்திப்பில் : ஃப்ரீ லெப்ட் அமைக்கும் பணி தீவிரம் :

திருச்சி

தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை சந்திப்பில் சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலைக்குச் செல்ல ஃப்ரீ லெப்ட் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை திருச்சி பழைய பால்பண்ணை சந்திப்பு அருகே நிறைவடைகிறது. இந்த இடத்திலிருந்து சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரை நோக்கிச் செல்லும் சர்வீஸ் சாலைக்குச் செல்ல ஃப்ரீ லெப்ட் பாதை இல்லை. இதனால், சிக்னலுக்காக காத்திருக்கும் வாகனங்களுடன் மதுரை சாலைக்குச் செல்லும் சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டிய வாகனங்களும் தினந்தோறும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்த கோரிக்கையை நுகர்வோர் அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி கோட்டம் சார்பில், ஃப்ரீ லெப்ட் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு, ஏற்கெனவே இருந்த மழைநீர் வடிகால் தூர்க்கப்பட்டு, சாலையின் ஓரத்தில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் ஏறத்தாழ 30 மீட்டர் நீளத்துக்கு சாலையை 2 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தி, அந்த இடத்தில் புதிய சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகள் முடிவுற்றால் ஃப்ரீ லெப்ட் பாதையின் மூலம் வாகனங்கள் காத்திருக்காமல் எளிதாக மதுரை சாலைக்குச் செல்லும் சர்வீஸ் சாலையை அடைய முடியும்.

தற்காலிகமாக மேற்கொள்ளப்படும் இந்த பணியால் ஓரளவுக்கு நன்மை கிடைக்கும் என்றாலும், இந்த சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தையும் அகலப்படுத்தி, ஃப்ரீ லெப்ட் பாதையை மேலும் விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x