Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி நேற்று ஆய்வு செய்தார்.
தி.மலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் குப்பைகள் நிறைந்து சுகாதாரம் இல்லாமல் உள்ளது. இதனால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை தினசரி சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும், வளாகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், உழவர் சந்தை மற்றும் கல்லூரி விடுதிகளுக்கு செல்லும் பாதையில் மழை நீர்தேங்கி நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமார சாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அலுவலக வளாகம் குப்பை கூடாரமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, நகராட்சி அலுவலர்களை வரவழைத்து, உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் வட்டாட்சியர் அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தனர். மேலும் அவர், வளாகத்தில் உள்ள பொது கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் மற்றும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகம் உள்ளே சென்ற மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, அலுவலகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், முடிவுற்ற கோப்புகளை பதிவறையில் ஒப்படைக்க வேண்டும், முக்கிய ஆவணங்களை ஆவண காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர், வட்டாட்சியர் அலுவலக அறையில் புதிய மாவட்ட மற்றும் வட்ட வரைபடத்தை வைக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் ரேவதி உட்பட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT