Published : 18 Aug 2021 03:14 AM
Last Updated : 18 Aug 2021 03:14 AM

சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் - திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிற்கு எதிர்ப்பு : தண்ணீர் தேங்கி பாதிக்கும் என விவசாயிகள் குற்றச்சாட்டு

சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு மழை, வெள்ள தண்ணீர் தேங்கும் பகுதியாக இருப்பதால் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையின் தாழ்வான பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து எடுத்து வரப்படும் நெல் மூட்டைகள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமாக இங்கு அடுக்கப்பட்டு வருகிறது.

பருவமழை காலங்களில் சுமார் 5 அடி முதல் 6 அடி வரை தண்ணீர் சூழ்ந்து நிற்கும் பகுதி இது. பெரும் சேதம் ஏற்படும் பகுதியாக இருக்கும் நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக திறந்த வெளி நெல் கிடங்கை அமைத்துள்ளது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை ஆலையில் உள்பகுதியில் மழைநீர் நுழைந்து சர்க்கரை முட்டைகள் நனைத்து பல லட்ச ரூபாய் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மழை காலத்துக்கு முன்பு இங்குள்ள நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றிட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இந்த கொள் முதல் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் பாதுகாப்பான மற்றும் மேடான இடம் இருந்தும் அதில் கிடங்கு அமைத்து மூட்டைகள் அடுக்காமல் இவ்வாறு செய்திருப்பது வேதனையை தருகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x