Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM
இலவச தடுப்பூசி செலுத்துவதில் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபவதாக புகார் தெரிவித்து வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று 300 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். நேற்று காலைமுதலே பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். அங்கு வந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். நகராட்சி அதிகாரிகளை பாஜகவினர் தொடர்பு கொண்டபோது, அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. அதிருப்தியடைந்த பாஜகவினர், வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இலவசமாக வழங்கப்படும் தடுப்பூசிகளில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என போலீஸார் தெரிவித்ததால், பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT