Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM
திருப்பூர் நீதிமன்ற சாலையில் தொன்மை மாறாமல் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது 13 சென்டில் அமைந்துள்ள ’சந்திரவிஹார்’ எனும் இந்த வீடு! சுதந்திரத்துக்கும், வரலாற்றுக்கும் பூர்வீகத் தொடர்புடையது இது. ஆனால் எவ்வித சலனமும் இல்லாத நீரோடை போல் காட்சியளிக்கிறது. மகாத்மா காந்தி திருப்பூர் வரும்போது தங்கும் இந்த வீடு, குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் பி.டி.ஆசர் மற்றும் பத்மாவதி ஆசருக்குச் சொந்தமானது. இன்றைக்கு அவரது பேரன் அஸ்வின் ஆசர், கொள்ளுப்பேரன் ரஞ்சீவ் ஆசர் உட்பட பலர் வாழ்ந்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தம தாஸ் தாமோதர் ஆசர். 1907-ம் ஆண்டு திருப்பூர் வந்தார். திருப்பூர் அப்போது பஞ்சு மற்றும் பருத்தி வியாபாரத்தில் தலை சிறந்து விளங்கியதால், ஆசர் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் நூற்பாலை நடத்தி வந்தார். 1932-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரிட்டிஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். காரணம் அதே நாளில் தியாகி பி.எஸ்.சுந்தரம் தலைமையில் நடந்த சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு பெறுவார் என்பதால் கைது செய்யப்பட்டார். காந்தியடிகள் திருப்பூர் வருகை தந்தபோது, ஆசர் தம்பதியரின் இல்லத்தில் தங்கி ஆலோசனையில் ஈடுபட்டார். நேரு, ராஜேந்திர பிரசாத், பட்டேல், ராஜாஜி போன்ற தலைவர்களும் இங்கு வருகை தந்துள்ளனர்.
பத்மாவதி ஆசர்
பி.டி. ஆசர் மற்றும் பத்மாவதி ஆசர் தம்பதி இருவரும் சுதந்திர வேட்கையில் ஆர்வம் கொண்டிருந்தனர். பத்மாவதி ஆசர் 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்பு அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொருளாளரானார். 1930-ம் ஆண்டு உப்பு சத்யாகிரகத்திலும், 1932-ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்திலும் பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 1930-31-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, 6 வார சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளார். 1932-ம் ஆண்டு இபிகோ 123-வது பிரிவின் கீழ் ஒருவருட சிறைத் தண்டனையும் பெற்றார். 1933-ம் ஆண்டு குற்றவியல் திருத்தச் சட்டம் 17 (1) பிரிவின் கீழ், 7 மாத சிறைத் தண்டனையும் பெற்றார். கோவை சிறைச்சாலையிலும், வேலூர் மகளிர் சிறைச்சாலையிலும் காவலில் வைக்கப்பட்டார். இவர் நினைவாக திருப்பூர் நகரின் பிரதானமாக உள்ள பகுதிக்கு பத்மாவதிபுரம் என பெயரிடப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன் அஸ்வின் ஆசர், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “100 ஆண்டுகளைக் கடந்த வரலாறு எங்கள் வீட்டுக்கு உண்டு. எங்கள் பாட்டி, பத்மாவதியின் சுதந்திர வேட்கை பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும் எனப் பாராட்டி, காந்தி கைப்பட கடிதம் எழுதினார். எங்களது தாய்மொழியான குஜராத்தியில், அவர் எழுதியக் கடிததத்தை இன்றைக்கும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம். எங்கள் வீட்டின் பத்திரத்தைப் போல், காந்தியின் கடிதத்தை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். எங்கள் தாத்தா மற்றும் பாட்டி இருவருமே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள். தேசத் தந்தை காந்தி, முதல் பிரதமர் நேரு, முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜாஜி போன்று தேச விடுதலைக்கு பாடுபட்ட பலர் எங்கள் வீட்டில் தங்கியிருந்ததால், வீட்டை மாற்றம் செய்ய எங்களுக்கு மனமில்லை. அப்படியே வைத்துள்ளோம். அவர்கள் பயன்படுத்திய இருக்கை, மேஜை, படுக்கை உள்ளிட்ட பொருட்கள் வரை அத்தனையும் பாதுகாத்து வருகிறோம் என்றார் மிகவும் பெருமிதமாக!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT