புதுமை இயந்திர உருவாக்கல் போட்டியில் - தேனி பொறியியல் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் பரிசு :
தொழில் முனைவோர் வளர்ச்சி மையம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளர் அமைப்பு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டி நடந்தது.
ஐந்து மண்டலங்களாக நடந்த இப்போட்டியில் 2, 758 கண்டுபிடிப்புகள் பங்கேற்றன. ஐந்து சுற்றுகளாக இந்த படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய லேத் ஸ்பின்னிங் கருவி மாநில அளவில் 8-வது இடத்தையும், மதுரை மண்டல அளவில் முதலிடத்தையும் பெற்றது.
இதற்காக ரூ.ஒரு லட்சம் பரிசுத் தொகையை பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எஸ்.தினேஷ்குமார், ஆர்.கோட்டியப்பன் ஆகியோரை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன், கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு, இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார், முதல்வர் சி.மதளைசுந்தரம், துணை முதல்வர் என்.மாதவன் ஆகியோர் பாராட்டினர்.
